மூட்டை, மூட்டையாக பதுக்கிய இலவச வேட்டி,சேலை பறிமுதல், ஊழல்!

மூட்டை, மூட்டையாக பதுக்கிய இலவச வேட்டி,சேலை பறிமுதல்
ஜனவரி 12,2010,00:00 IST
http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15351

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த, தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகளை தாசில்தார் பறிமுதல் செய்தார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் கடந்த 1ம் தேதி முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது.கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கண்ணன் என்பவரது வீட்டில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகள் பதுக்கி வைத்திருப்பதாக பண்ருட்டி தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது.

தாசில்தார் பாபு மற்றும் வருவாய் துறையினர் நேற்று விடியற்காலையில் கண்ணன் வீட்டின் முன் உள்ள கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அங்கு மூட்டையாக கட்டி வைத்திருந்த 2,000 வேட்டி, சேலைகளை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். அரசு வழங்கும் இலவச வேட்டி, சேலைகளை பாலிகாட்டன் ரகத்தை சேர்ந்ததால் பெரும்பாலானோர் அணிவதில்லை. இருப்பினும் இலவசமாக கிடைப்பதை விட மனமின்றி வாங்கி, அதை பிளாஸ்டிக் பொருள் வியாபாரிகளிடம் 40 ரூபாயிற்கு விற்பது தெரிய வந்துள்ளது.மக்களின் தேவையை அறிந்து, அதை பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் இலவச வேட்டி, சேலைகளை தரமானதாக வழங்கினால் மட்டுமே இதுபோன்ற தவறுகளை தடுக்க முடியும்.

இலவச வேட்டி, சேலையில் ஊழல்? அதிகாரிகள் ஆசியுடன் போலி சங்கம்
டிசம்பர் 12,2009,00:00  IST

சோமனூர் : இலவச வேட்டி, சேலைகளை மொத்தமாக வெளிமார்க்கெட்டில் வாங்கி, அரசுக்கு சப்ளை செய்யும் துணிகர மோசடியில், போலி கூட்டுறவு சங்கம் ஈடுபட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள், புகார் கிளப்பியுள்ளனர்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது, ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வேட்டி, சேலை உற்பத்தி நடக்கிறது. உற்பத்தி குறியீடுகள், “கோ – ஆப்டெக்ஸ்’ நிறுவனம், கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குகிறது. ஒரு வேட்டி நெசவு கூலியாக 15 ரூபாயும், சேலைக்கு 21.42 ரூபாயும் வழங்கப்படுகிறது.”தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கணக்கிட்டு, கூலியை அதிகரிக்க வேண்டும்’ என, விசைத்தறியாளர்கள், மூன்றாண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கூலி உயர்வு வழங்காததால் பெரும்பாலான விசைத்தறியாளர்கள், இலவச வேட்டி, சேலை உற்பத்தியில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். வரும் 31ம் தேதிக்குள் முடிக்க, இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், 50 சதவீத உற்பத்தி கூட முடியவில்லை.

இது குறித்து, விசைத்தறியாளர்கள் கூறியதாவது:”கூலி உயர்வு கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என அமைச்சரும், அதிகாரிகளும் நீண்ட காலமாக கூறி வருகின்றனர். தற்போது ஈரோடு உள்ளிட்ட பிற பகுதிகளில், சேலை உற்பத்திக்கு சேலை ஒன்றுக்கு 3.06 ரூபாய் கூலி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், இதுகுறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை.மேலும், கூட்டுறவு சங்கங்களுக்கு அளிக்கப்பட்ட உற்பத்தி இலக்குகள் முடிக்கப்படாததால், வேட்டி, சேலை ரகங்களை வெளிமார்க்கெட்டில் கொள்முதல் செய்ய, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, போலியாக கூட்டுறவு சங்கம் துவக்கி, அதிகாரிகளின் ஆசியுடன், ஆளுங்கட்சியினர் செயல்படுகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில், புதிதாக சில உறுப்பினர்களை போலியாக சேர்த்து, கோவை கணபதியில் கூட்டுறவு சங்கம் செயல்படுகிறது. இதில், 30 விசைத்தறியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளதாகவும், 150 தறிகளில் வேட்டி, சேலைகள் தயாராவதாகவும் கணக்கு காட்டப்படுகிறது.

இதில், சேர்க்கப்பட்டுள்ள விசைத்தறியாளர்கள், உள்ளூர் மார்க்கெட்டில் காடா துணி உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இச்சங்கத்துக்கு, கூட்டுறவுத் துறையினர் எந்த அத்தாட்சியும் இல்லாமல், உற்பத்தி குறியீடுகளை வழங்கியுள்ளனர். வெளிமார்க்கெட்டில் இருந்து வேட்டி, சேலைகளை கொள்முதல் செய்து, சங்க உறுப்பினர்கள் நெசவு செய்தது போல, கணக்கு காண்பித்து வருகின்றனர். ஏறத்தாழ 1.5 லட்சம் எண்ணிக்கையிலான வேட்டி, சேலை உற்பத்தி நடந்துள்ளதாகவும் கூறுகின்றனர். கூட்டுறவுத் துறை அமைச்சரின் பெயரை பயன்படுத்தி, இந்த துணிகர மோசடியில் ஈடுபட்டுள்ள இருவருக்கு, கூட்டுறவு துறை உயரதிகாரிகள் உடந்தையாக செயல்படுகின்றனர். இவ்வாறு விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.

Advertisements

குறிச்சொற்கள்: , ,

2 பதில்கள் to “மூட்டை, மூட்டையாக பதுக்கிய இலவச வேட்டி,சேலை பறிமுதல், ஊழல்!”

 1. vedaprakash Says:

  ஈரோட்டில் இலவச வேட்டி-சேலை வழங்குவதில் மோதல்; தி.மு.க-காங்கிரசார் வாக்குவாதம்
  Erode வெள்ளிக்கிழமை, ஜனவரி 01, 5:00 PM IST
  http://www.maalaimalar.com/2010/01/01170000/ERD11010110.html

  ஈரோடு, ஜன. 1-2010

  பொங்கல் பண்டிகையையொட்டி இலவச வேட்டி- சேலை வழங்கும் திட்டத்தை சென்னையில் முதல்- அமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இன்று இலவச வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது.

  ஈரோடு மாவட்டத்திலும் இன்று வேட்டி-சேலை வழங்கப்பட்டது. ஈரோடு எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே உள்ள ரேசன் கடையில் 28, 37, 38 ஆகிய வார்டுகளுக்கான இலவச வேட்டி-சேலை வழங்கப்பட்டது. இதை ஈரோடு மாநகராட்சி மேயர் குமார்முருகேஷ் தொடங்கி வைத்தார்.

  இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பி.கே.பழனிச்சாமி, மாவட்ட பிரதிநிதி மார்க்கெட்சேகர், கவுன்சிலர் சண்முகம், ஈரோடு மாநகர துணை செயலாளர் சந்திரசேகரன், நடேசன், தலைமைக்கழக பேச்சாளர் இறைவன், சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் சௌந்தரராஜன், வருவாய் அதிகாரி ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  ஈரோடு 26-வது வார்டில் இலவச வேட்டி-சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த வார்டுக்கு மேயர் வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் 26-வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி கொற்றவேல் ரேசன் கடை முன்பு வெகுநேரம் காத்திருந்த பொதுமக்களுக்கு இலவச வேட்டி-சேலையை வழங்கினார்.

  இதற்கு அப்பகுதி தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேயர் வராமல் எப்படி நீங்கள் வேட்டி-சேலையை வழங்கலாம் என்று கேட்டனர். இதனால் காங்கிரஸ் கவுன்சிலர் மற்றும் தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் இலவச வேட்டி- சேலை வழங்குவது நிறுத்தப்பட்டது.

  இந்த நிலையில் மேயர் குமார்முருகேஷ் வந்து இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினார். இதன்பிறகு இலவச வேட்டி-சேலை தொடர்ந்து வழங்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 2. vedaprakash Says:

  இலவச வேட்டி-சேலை ஊழல் வழ‌க்‌கி‌ல் மதுசூதன‌ன் ‌விடுதலை
  சென்னை, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2009( 09:41 IST )

  http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0908/25/1090825005_1.htm

  இலவச வேட்டி-சேலை ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன் உள்பட 6 பேருக்கு விதிக்கப்பட்ட ‌சிறை தண்டனையை சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ரத்து செய்‌து‌ள்ளது.

  1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது. 92-93ஆம் ஆண்டில் பொங்கலுக்காக ஏழைகளுக்கு இலவச வேட்டி-சேலை வழங்கப்பட்டது. தமிழ்நாடு டெக்ஸ்டைல்ஸ் கார்ப்பரேஷன் மூலம் ரூ.12 கோடியே 58 லட்சத்துக்கு இதற்காக வேட்டி-சேலை வாங்கப்பட்டன. இவ்வாறு வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக சி.பி.சி.ஐ.டி. காவ‌ல்துறை‌யின‌ர் வழக்குப்பதிவு செய்தனர். ரூ.3 கோடிக்கு மேல் ஊழல் நடந்ததாக முன்னாள் அமைச்சர் மதுசூதனன் உள்பட 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

  இ‌ந்த வழ‌க்கை ‌விசா‌ரி‌த்த தனி ‌நீ‌திம‌ன்ற நீதிபதி, மதுசூதனனுக்கு 2 ஆண்டு ‌சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், தமிழ்நாடு டெக்ஸ்டைல்ஸ் கார்ப்பரேஷன் இயக்குனர் நரசிம்மலுக்கு 2 ஆண்டு ‌சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், அரவிந்தகுமார், செல்வராஜ் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு ‌சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதமும், பி.முத்துசாமிக்கு ஒரு ஆண்டு ‌சிறை தண்டனையும், ரூ.7,500 அபராதமும், ஜெயபிரகாசுக்கு 3 மாதம் ‌சிறை தண்டனையும் விதித்து 16.3.2000 அன்று தீர்ப்பு வழங்கினார்.

  இந்த தீர்ப்பை எதிர்த்து மதுசூதனன் உள்பட 6 பேரும் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மே‌ல் முறை‌யீடு செய்தனர். இந்த வழக்கை ‌விசா‌ரி‌த்து ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்த நீதிபதி எம்.ஜெயபால், இலவச வேட்டி-சேலை வழங்க கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததற்கான நேரடி சாட்சியம் எதுவும் கூறப்படவில்லை. எந்த வகையில் பார்த்தாலும் குற்றச்சா‌ற்றுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. தனி ‌நீ‌திம‌ன்ற நீதிபதி தவறாக ஆராய்ந்து 6 பேருக்கும் தண்டனை வழங்கியுள்ளார்.

  முதலமைச்சர்தான் முடிவெடுத்துள்ளார். குறைந்த விலைக்கு வேட்டி-சேலை வழங்குபவர்களிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. டெண்டர் விட்டதிலோ, ஒப்பந்தம் செய்ததிலோ தவறு நடந்ததற்கான எந்த ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை. மேற்கண்ட காரணங்களினால் 6 பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்பட்டு, வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள் எ‌ன்று ‌நீ‌‌திப‌தி ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: